Monday, November 19, 2018

பழைய்ய புகைப்படங்கள்


அன்புள்ள நட்புகளுக்கு,

சிங்காராவின் பழைய புகைப்படங்களை பதிவேற்றிட இன்றுதான் சமயம் வாய்த்தது. 
வாட்ஸப்பில் பகிர்ந்தால்  தரம் குறைய வாய்ப்பிருக்கிறது, மட்டுமன்றி தொலைந்துவிடவும் சாத்தியம் என்பதால், இங்கே பதிவேற்றி வைக்கிறேன்.  

 அன்புராஜ், செல்வக்குமார், சலாம் அண்ணன்களின் அளப்பற டான்ஸ்..











இங்கே பதியவேண்டிய கருத்துக்களை எனது வாட்ஸப் எண்ணில் (98432 11228) பகிருங்கள்.  

நன்றி..
கணேஷ் நாராயணஸ்வாமி

Sunday, June 15, 2014

காடு மிரண்டா வீடு கொள்ளாது..


சிங்காராவில் வாழ்ந்து சென்றவர்கள் கொண்டு செல்வது சுத்தமான காற்றும்.. கொஞ்சம் பிழையில்லா அழகியல் நினவுகளையும்தான்..

நான் மாதமொருமுறையேனும் சென்று வருவது.. எனக்குள்ளான ஆக்ஸிஜன்களை புதுப்பித்து என்னை புதுப்பித்துக் கொள்ளத்தான் போலும்!

கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும் சிங்காரா சென்று வந்தேன்..



திருமதி.வர்கீஸ் அவர்களின் இரங்கல் செய்தியுடன் இந்த பதிவை துவங்குகிறேன்..  அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். 

புதிய மின் நிலையம் கட்டப்பட்ட பின்னர் நாம் பயன்படுத்திய  2G டைப் குடியிருப்புகள் பல பயன்பாட்டில் இல்லாமலும், மறு சீரமைக்கப்படாமலும் போய்விட்டன. 

அவற்றின் அழகிய தோற்றம் சில 

இங்கே.. 


நாம் இயற்கையிடம் எதை எடுத்துக்கொண்டோமோ.. அதை நம்மிடம் இருந்து இந்த காடுகள் திரும்ப எடுத்துக்கொண்டிருக்கிறது.. கீதையின் சாராம்சமேதான்.. இங்கே இன்னமும் கனகச்சிதமாய் பொருந்துகிறது.




மறைந்த திரு.கே.சி.ராமன் அவர்கள் நீண்டகாலமாக,  ஓய்வுபெறும்வரை வாழ்ந்த வீடு.. 






இந்த வீடு என் நினைவில் இருந்தவரை திரு.முத்துக்குட்டி ஆசாரி அவர்கள் இருந்த வீடுதான்.. தற்போது அவர்கள் குடும்பம் கோவையில் இருப்பதாய் தகவல்..


100 வருடங்களை நெருங்கும்போதும்.. மனித மனங்களைப்போல் அல்லாது நொறுங்கமல் நிமிர்ந்து நிற்கும் இந்த கட்டிடங்கள் நம்மில் பலரின் பால்யங்களை பத்திரமாக தனக்குள் வைத்துள்ளது.. என்றாவது நாம் வந்து கேட்டால் திரும்ப தரவேண்டும் என நினைத்திருக்கலாம்.


சமீபத்தில் பேசிய பலரும் ஒரு 1980-90மக்களின்  GET TOGETHER நடத்தினால் நன்றாக இருக்கும் என்றே சொல்கின்றனர்.. யார் முன்னெடுப்பது.. பொருளாதார சிக்கல்கள் என்று பல விடயங்களை யோசிக்கும்போது.. எஸ்கேப்பாகிவிடத்தான் தோன்றுகிறது... தற்போது சிங்காராவில் இருக்கும் பொறியாளர். திரு.சோமு.கருப்பையா அவர்கள் மாற்றலாகி செல்லும் முன்னர் இதை செய்துவிடுதல் நலம்..  


அவரது முகநூல் லிங்க் கீழே.. 
https://www.facebook.com/karuppiah.palaniappan?fref=ts

உங்களது கருத்துக்களை ஜகதீசனுக்கு 94432 08492 / கணேஷ் 9843211228 ல் அழைத்து சொல்லுங்கள்.



இப்போது வீடுகள் மட்டும் தமது பழம்பெருமைகளை பேசிக்கொண்டு திரிவது உற்று கேட்டால் மட்டுமே மட்டுப்படுகிறது. ஜீவனுள்ள வீடுகளாச்சே!!

இந்நிலையிலும்...  என் நிலை பரவாயில்லை என்பது போல் எங்கள் வீடு இன்னமும் அப்படியே உள்ளது மகிழ்ச்சிதான்.. கடவுள் இருக்கான் கொமாரு!!



எனக்கு தெரிஞ்சு.. ஜகதீசன பெத்த பாவத்துக்கு அவங்கப்பா.. திரு.மாதவன் அவர்கள் பரிகாரமா இந்த மரத்த நட்டு வெச்சாரு.. வீட்டுக்கொரு மரம் வளத்துங்கன்னு சொன்னதுக்காக அவரு அட்லீஸ்ட் ஊருக்கொரு மரம் வளக்கலாம்னு முடிவு பண்ணிட்டாரு போல... 


நம்ம ரவுண்டானாவே குளுகுளுன்னு இருக்க காரணமான அவருக்கு ஒரு ஓ போடுவோம்! 


 யூ ட்யூபில் வலம் வந்தபோது கண்ணில் பட்ட பாடல்..

முழுவதும்  சிங்காரா கார்டனில் எடுக்கப்பட்ட ஒ(ரே)ரு  பாடல் காட்சி..

http://www.youtube.com/watch?v=QZaL_g8Ul5s

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்..

நன்றிகளுடன்..

கணேஷ் நாராயணஸ்வாமி.




Monday, February 18, 2013

வனயுத்தம் - நமக்கு அருகில் நடந்தது..


இது வெறும் விமர்சனம் அல்ல.. இந்த படம் எனக்குள் உண்டாக்கிய சில அதிர்வுகளின் வெளிப்பாடு.


வனயுத்தம், வீரப்பனை குறி(வை)த்த கதை என்பது தெரிந்த விஷயம்.  ஆனால் வீரப்பன் உலவிய காடுகளில் ஒரு அடர் வனம்தான் முதுமலை வனச்சரகம். அங்கு ஒரு மின்முகாமில் வளர்ந்தவன். (சிங்காரா (http://singaracamp.blogspot.in/) என்பது  தமிழ் நாடு மின்சார வாரியதிற்கு சொந்தமானது).  அங்கே எனக்கு நேர்ந்த சில வீரப்பன் தொடர்பான நிகழ்வுகள், மற்றும் அறிந்த விஷயங்கள் இந்த படத்தோடு என்னை ஒன்றச்செய்யவில்லை  என்பதே உண்மை. 

உண்மைக்கு வெகு அருகில் நின்று சொல்ல வேண்டிய வரலாறு..ஆனால் இப்படம் அரசாங்கத்தின் ’ஆக்க’ப்பட்ட ஆவணங்களுக்கு சப்பைக்கட்டு வேலையை மட்டுமே செய்துள்ளது..

சின்னத்திருடனாக இருந்த வீரப்பனை பாலூற்றி வளர்த்தது வேறு யாருமல்ல, இதே அரசாங்கத்தின் ஊழல் பெருச்சாளிகளும், மற்றும் பல வனசெல்வங்களை விற்று வயிறு வளர்த்த பன்றிகளும்தான்.  சும்மா சுள்ளி பொறுக்க காட்டுக்கு சென்ற பெண்கள் தலைதெறிக்க காட்டிலிருந்து ஓடி வருவது வாடிக்கை. சில சமயம் துரத்தியது காட்டு மிருகங்கள், பல சமயம் கொள்ளையர்களுக்கு தடம் உண்டாக்கித்தரும் வன ஊழியர்கள்தான். 

ஒரு நிலையில் இந்த மொத்த வணிகத்தை தன் கையிலெடுத்துக் கொண்டது மட்டுமே வீரப்பன் செய்த பிழை. 

அதற்காக வீரப்பன் காட்டு மிருகங்களை கொன்று குவித்தது ஞாயம் என்று சொல்லவில்லை. அதையும் ஒரு கட்டத்தில் அவன் கைவிட்டுவிட்டு ஆட்களை கடத்தும் வேலையில் இறங்கிவிட்டான். அப்போதுதான் அரசுக்கு வீரப்பன் ஒரு பெருந்தொல்லையாக மாறினான்.  காட்டை சூரையாடும்வரை தேமேயென்று இருந்த அரசு.. வீரப்பன் நாட்டை உலுக்கத்தொடங்கியதும்

என் நண்பனின் அப்பா காட்டுக்குள்  விறகு வெட்ட சென்றவர்.. நல்ல திடகாத்திரமான உடல் கொண்டவர்.  முதல் சுமையை (ஒரு கட்டு விறகு) கொண்டு வந்து வீடு சேர்த்துவிட்டு சென்றவர், இரண்டாம் முறை திரும்ப வரவேயில்லை. நாங்கள் புதைகுழி மற்றும் காட்டின் பலபகுதிகளில் தேடி கிடைக்கவில்லை. இன்று வரையிலும் அவர் திரும்பவில்லை. (மிருகங்கங்கள் அடித்தால் உடலின் பகுதியாவது கிடைக்கும். மேலும் புதைகுழிகள் எங்கெங்கு உள்ளன என்பது அவருக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் அத்துபடி..) கடைசியில் நாங்கள் நினைத்தது, அவர் வீரப்பனுடன் சேர்ந்துவிட்டார் என்பதே.  கடைசியில் வீரப்பன் சுடப்பட்ட பின்னர் அந்த கூட்டத்தில் அவர் இல்லை. அவர் என்ன ஆனார் என்பது எங்களுக்கு இன்றும் புதிர்தான். இப்போதும் அவர் குடும்பத்தினர் மசினகுடியில் வசித்து வருகின்றனர். அவரை எதிர்பார்த்த வண்ணம்.

அதற்கு பின்னர் நான் (1994 என நினைக்கிறேன்) அன்றைய ஆப்பிள் கம்ப்யூட்டர் எஜுகேஷனில் மூன்றுவருட கோர்ஸ் படித்துக்கொண்டிருந்தேன். வாரத்தில் மூன்று நாட்கள்தான் க்ளாஸ்.  அரசு ஊழியரேயானாலும் சொற்ப சம்பளத்தில் என் முழுத்தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத அப்பா. என் அப்பாதான், அதனால் நான் திருப்பூரில் இருந்து சில முகமதிய நண்பர்கள் முன்பணம்கூட வாங்காமல் தரும் பனியன் துணிகளை தருவார்கள். அதை ஓய்வு நாட்களில் பக்கத்தில் உள்ள மின்வாரிய முகாம்களில் சென்று விற்று வருவேன்.  ஒரு நாளைக்கு நான்கு முறைதான் பேருந்து ஊருக்குள் வரும்.  


அன்று பஸ் வராததால் சாலை வழியாகவே காட்டினுள் நடந்துக் கொண்டிருந்தேன்.  வழியில் ஓரிடத்தில் ஒரு ஆள் காட்டுப்பகுதியில் இருந்து வந்து என் எதிரே நின்றான். ’தம்பி மாடு விழுந்து கிடக்கு, தூக்கி விடனும் வந்து உதவி பண்ணுறியா?’  என்று அழைத்தான். அந்த ஆள் வைத்திருந்த கத்தியின் வடிவம் அந்த ஏரியா காட்டுவாசிகள் பயன்படுத்தும் வடிவில் இல்லை. (இதைப் போன்ற நுட்பமான விஷயங்களை படத்தில் கருத்தி கொள்ளவில்லை.. ஏனோ தானோவென்று.. )  எனக்கு அந்த ஆளை முன்பின் பார்த்த ஞாபகம் இல்லை..  இருந்தும் உதவி எனக்கேட்டதால் கிளம்பிக் காட்டினுள் சற்று நடந்தோம். அங்கு வற்றிய காட்டு ஓடை ஒன்றின் மணற் பரப்பினைக் காட்டி இங்கதாம்பா மாடு படுத்திருந்துச்சு.. காணொமே, என்றவன் வா கொஞ்சம் உள்ளே போய் பார்க்கலாம் என அழைத்தான். அங்கு மாட்டின் கால்டித்தடம் எதுவும் இல்லை. மேலும் மாட்டிற்கு காயம் ஏதேனும் பட்டிருந்தால் வேப்பெண்ணை தடவியிருப்பார்கள். வாசம் வரும், அது மட்டுமல்லாமல் எழுந்து போன மாட்டினை ’மறுபடியும் எழுப்ப போவானேன்’ என்று சந்தேகமாய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தூரத்தில் மரத்தின் பின்னாலிருந்து இருவர் எட்டி பார்ப்பது தெரிந்தது.. சந்தேகம் வலுவானவுடன் அந்த ஆள் என்னை கூப்பிட கூப்பிட  நான் தெறித்து ஓடி சாலைக்கு வந்துதான் வேகத்தைக்குறைத்தேன். யானை துரத்தும்போதுக் கூட அப்படி ஓடியது இல்லை. அப்புறம்தான் அந்த டீஷ்ர்ட் பேக் ஐ காட்டுக்குள் வைத்துவிட்டது ஞாபகம் வந்தது. 

அதற்கு பின் வீரப்பன் வீடியோ கேசட் அனுப்பும்போது நீங்களெல்லாம் எதை தேடியிருப்பீர்கள் தெரியாது. நான் என் டீ ஷர்ட்டுகள் தெரிகிறதா என்றுதான் பார்ப்பேன். 

அதற்கு முன்பு ஒருமுறை,  எங்கள் மின்வாரிய முகாமில் மூன்று ஷகிலாவை ஒன்றாய் கட்டிவைத்த சைஸுக்கு ஒரு பெரிய சநதன மரம் இருந்தது. அதை ஒரு நாள் ஒரே இரவில் வீரப்பனின் கும்பல் வந்து அறுத்துச்சென்றது. அதன் அருகில் உள்ள குவாட்டர்ஸில் குடியிருந்த சீனிவாசன் என்பவர் அவரது பாத்ரூம் வழியாக மூக்கை நுழைத்து பார்க்க.. சற்றைக்கெல்லாம்  ஒரு துப்பாக்கியை இவருக்கு நேராக நுழைத்த ஒருவன் சொன்னானாம் “பேசாம இருந்தீங்கன்னா.. அறுத்திட்டு போயிட்டே இருப்போம்..இல்லன்னா..’ என்று மிரட்டியதில் காய்ச்சல் வந்து படுத்தவர் ஒருமாதம் கழித்து தான் எழுந்தார். என் ஆச்சரியம் எல்லாம், அவ்வளவு பெரிய மரத்தை எடுத்துச்செல்ல எத்தனைபேர் வந்திருப்பார்கள் என்பதுதான். இன்னும் அதன்  சிறிய துண்டுகள் பலர் வைத்திருக்கிறார்கள். அரைத்துப்பூச. வழக்கமாக மரத்தின் ஆணிவேர்தான் முக்கிய பகுதியாக தோண்டிச்செல்லும் வீரப்பன் இந்த மரத்தின் தரைப்பகுதியிலிருந்து ஒன்றரை அடி உயரம் வரை விட்டுச் சென்று விட்டான் என்றால், அந்த மரத்தின் அளவு எவ்வளவு பெரிதாய் இருக்கும் என்று யூகித்துக் கொள்ளுங்கள்..

அதன் பின்னர் எங்கள் கேம்பின் ’க்ளப் டே’ வுக்கு சற்று ஒதுக்குப்புறமான தூரத்தில் இருந்த ‘ரெக்ரியேஷன் க்ளப்’ல்  நாடக ப்ராக்டிஸ் முடித்துவிட்டு வீட்டிற்கு இரவு சுமார் ஒரு மணியளவில் தனியாக திரும்பிக்கொண்டிருந்தேன். திடீரென கேம்பின் கீழ்பகுதியின் தெருவிளக்குகள் ஒருசேர அணைந்தன. நான் தடுமாறியபடி வீட்டின் அருகில் வந்தேன்..(வீடுகளின் மின் இணைப்பு வேறு லைன்..)  என் வீட்டில் இருந்து சற்று தூரத்தில் இருந்த வீட்டிற்கு நேராக பச்சை பனியன் அணிந்து லுங்கியுடன் ஒருவன் நீண்ட தடியுடன், பாறை ஒன்றின் மேல் கால் ஊன்றியபடி நின்றிருந்தான்.  என்னை பார்த்தும் விட்டான். ஆனால் அவனிடம் எந்த பதற்றமும் இல்லை..  நான் சத்தமில்லாமல் வீட்ட்டின் கதவை தட்ட அம்மாதான் திறந்தாள். வாலைச்சுருட்டிக் கொண்டு படுத்தவன் காலையில் இன்னொரு சந்தன மரம் வெட்டிட்டு போயிட்டானுக என்ற செய்தியை கேட்டுதான் எழுந்தேன்.   

இப்படியாக பல நிகழ்வுகள். ஆனால் இவை எதிலும் வீரப்பனால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. அவன் கொன்றது எல்லாம் அவன் தொழில் முறை விரோதிகளைதான்(?!) .

இதுபோல் ஏராளமான அனுபவங்கள். சரி.. இப்போது என் அனுபவங்களை கொஞ்சமேனும் உள் வாங்கியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.   இனி படத்தினை கவனிக்கலாம். 

முதலில் படம் எடுக்கப்பட்ட காடு.. அதை காடு என்று சொல்ல முடியாது.. வீரப்பன் உலவியது ‘ட்ராப்பிகல் எவர்க்ரீன் வெஜிட்டேஷன்’ வகைக் காடுகள்.. படத்தில் உள்ளது ‘ட்ராபிகல் தார்னி (thorn) வெஜிட்டேஷன்’ என்று வரையறுக்கலாம்.  கதையின் காலக்கட்டம் 2000தின் முன் பின்னான ஆண்டுகள்.. அதில் அர்ஜூன் (விஜியகுமாராக..) இன்றைய நவீன எல்சிடி மானிட்டர்களும், ஸ்லிம் லாப்டாப்புகளுடன் வலம் வருகிறார்..

வ.ஐ.ச ஜெயபாலன் மட்டும் மிலிட்டரி பெரியவராக (போட்டுக்கொடுக்கும்..)வரும் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.   வீரப்பன் (கிஷோர்) உட்பட மீதம் எல்லாம் பக்கா சினிமாத்தனம்.

காவல்துறையினர்,அரசு ஊழியர்கள் வீரப்பனை தேடுகிறேன் பேர்வழிகள் என்று வீரப்பன் சார்ந்த கிராமங்களில் கொட்டாட்டம் போட்ட நிகழ்வுகள் சித்தரிக்கப்படவில்லை.. (உண்மையை சொல்ல பயந்தவன் எதுக்கு படமெடுக்கணும்.. )  

இன்னும் பல சிரத்தையில்லாமல் எடுக்கப்பட்ட காட்சிகள்.. என்று படம் முழுக்க அற்பத்தனங்களும் சினிமாத்தனங்களும் நிறைந்த காட்சிகளே.  

க்ளைமாக்ஸில் வீரப்பன் கொல்லப்பட்ட காட்சி மட்டுமே போலிசாரின் வஞ்சக வெற்றியை சொல்லாமல் சொல்லுகின்றது. 

வீரப்பன் திரிந்தசமயத்தில் வேறு திருடர்கள் காட்டினுள் செல்ல பயப்பட்டதால் பல சிற்றுயிர்கள், விலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இதை யாரும் மறுக்க முடியாது. இன்று கண்டவனெல்லாம் காட்டில் களவாடும் பொழுதுகளை தினமும் கேட்கிறோம்.  இன்னும் என்னவெல்லாமோ தொன்றுகிறது.. 

ஞாபகங்களுக்கு காடுகளைப் போல் எல்லை இல்லையே.. 

ஆட்டமா தேரோட்டமா போன்ற குத்துப்பாட்டுகள் எதுவும் இல்லாதது மட்டும் பெரிய ஆறுதல்.

நல்ல நேர்மையான பதிவாக இந்தப்படம் இல்லை என்ற குற்றச்சாட்டுடன்.. 

கணேஷ் நாராயணஸ்வாமி.
Ph: 98432 11228.






Sunday, August 12, 2012

ஷாந்தி விஜயா உயர்நிலை பள்ளி.. மீண்டும் பள்ளிக்கு போனோம்.- பாகம் 1

அன்புள்ளங்களுக்கு,

நீண்ட நாட்களுக்கு பின்னர் பதிவு ஏதும் போடவில்லையே என்ற உணர்வு ஏற்பட.. நமக்கு எல்லாம்.. அறிவு பேழையாக  இருந்த சாந்தி விஜயா உயர்நிலை பள்ளியில் எங்கள் பேட்ச்-1990-1991 மாணவர்கள் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதியில் புத்தாண்டு அன்று ஒன்று கூடினோம்.. அையே பிவோட்டுவிடாம் என்றுடிவில் இை எழுகிறேன்.

  
பரவசம் மிகுந்த, எங்களை எல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்திய அந்த நிகழ்வின் புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு வைத்திடலில் பேருவகை அடைகிறேன்..


                                     ( இது நாங்கள் வரவேற்பிற்கு வைத்த ஃப்ளெக்ஸ்)

பள்ளி தாளாளர் சேட்டு.. நாங்கள் எதிர்பார்த்ததைப் போலவே புதிய பள்ளிக்கட்டிடத்தில் இவ்விழாவினை நடத்திட அனுமதி வழங்கவில்லை..  ஆனாலும் சோர்ந்துவிடாமல் பள்ளி நீண்ட நாட்களாக நடந்து வந்த பழைய பள்ளி கட்டிடத்திலேயே நடத்துவது என்ற முடிவுக்கு வந்தோம்.

பள்ளிக்கட்டிடத்தை சென்று பார்த்தபோது.. சற்றே சிதிலமான நிலையில் இருந்தாலும், கண்முன்னே நாம் ஓடி ஆடி ஆசிரியர்களைக் கண்டால் பதுங்கி கிடந்த காட்சி இன்னும் அழகான  நினவுகளாய் சட்டமிட்ட புகைப்படங்களாய் கிடந்தன..

அவரவர்க்கு பிடித்தமான நினைவுக் கோர்வைகளை தேர்ந்து எடுத்து மனசுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டோம்..

ஜனவரி ஒன்றாம் தேதியினை ஏற்கனவே தீர்மானித்தபடியால் முதல் வேலையாக தொடர்பிலிருக்கும் மாணவர்களை கொண்டு விடுபட்ட மற்றையொரையும் தொடர்புகொள்ள முயற்சிகள் தொடங்கினோம்..

(பொறியாளர் திரு. சோமு.பழ.கருப்பையா) 
சிறப்பு விருந்தினராக.. சிங்காரவைச் சேர்ந்த மின் பொறியாளர் திரு. சோமு.பழ.கருப்பையா (தொடர்புக்கு: 94432-08414)  அவர்களை வரும்படி கேட்டுகொண்டோம்.. அவரும் மறுக்காது ஏற்றுக்கொண்டார்..  பின்னே இதுவரை சிங்காரா மின்நிலையம் கண்ட அதிகாரிகளுள் அவர் மெய்யாகவெ சிறந்தவர் அவர் என்பதற்கு இன்றைய சிங்காராவே சாட்சி. பண்பாளர், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடையே தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகளை கட்டணம் ஏதுமின்றி, மாணவர்களுக்கு ஊக்கப்பரிசுகளை வழங்கி நடத்திச் செய்துள்ளார்.
மாசற்ற சேவைக்கு இவரை அடையாளம் காட்டலாம். எனவேதான் இவரை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்தோம்.



  ஆசிரியர்கள் அனவரையும் அழைத்திருந்தாலும் திரு போலன் அவர்களும் தலைமை ஆசிரியர் திரு நடராஜன் (கணித ஆசிரியர்)  அவர்களும் வர இயலாமற் போனது பெரும் வருத்தமே.

 தமிழய்யா திரு. ஆறுமுகம் அவர்கள் குறித்த நேரத்தில் வந்திருந்தார். அவரைக்கொண்டு நிகழ்ச்சியினை தமிழ்தாய் வாழ்த்துக்களுடன் துவங்கினோம்.  நீண்ட நாட்கள் கழித்து பாடுவதாலோ.. அல்லது உணர்ச்சி பெருக்காலோ எல்லொர் உதடுகளும் தடுமாற்றம் கொண்டன.

  அதன் பின்னர் வரவேற்புரையினை தொடர்ந்து மாணவர்களை ஒவ்வொருவராக வந்து  பள்ளிக்குப்பின்பான அவர்களது வாழ்க்கையினை சுருக்கமான உரைகளாக வழங்கினர். எங்கே!!?.. பாதிப்பேருக்கு உவகையின் வெளிப்பாடாக ஆனந்தக்கண்ணீரே.  அதன் பின்னர் குழந்தைகளின் (எங்கள் பள்ளித்தோழியரின் வாரிசுகளும்தான்..!)
கலை நிகழ்ச்சி மற்றும் ஆசிரியர்களின் பேருரைகளுமாய்  மீண்டும் பள்ளி விழாக்கோலமே பூண்டது..

சற்று தாமதமாகவே  வந்தாலும் சற்றும் குறையாத அன்றைய அதே மிடுக்குடன் பள்ளிக்கு வந்தார் திரு.நடராஜன் அவர்கள். (சோஷியல்..சாரேதான்..)

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உரைகளின் சாராம்சம் அடுத்த பாகத்தில் தட்டச்சேற்றுகிறேன்.

அதன் பின்னர் அருமையான எளிமையான மதிய விருந்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.


SRI SHANTHI VIJAYA HIGH SCHOOL - 1990-1991 BATCH
MASINAGUDI


Sunday, December 25, 2011

சிறுகதை


                                                   
அம்மாவுக்கு எல்லாம் தெரியும்

   டேய்சின்னவனேமேல போயி சம்முகண்ணன் வீட்டு மாதுளை செடியில இருந்து கொழுந்தா பாத்து அஞ்சாறு கிளை ஒடிச்சுட்டு வாடா”, வயிற்றுவலி காரணம் காட்டி அன்று பள்ளிக்கு மட்டம் போட்டிருந்த எனக்கு அம்மா சொல்லும் வேலை சலிப்பை உண்டாக்கியது. ‘புதிதாய் வாங்கிய ஆட்டுக்குட்டிக்குத்தான் பறித்துவரச்சொல்கிறாளோ?’ என்று ஓர் நொடி தோன்ற விருட்டென்று கிளம்பினேன்
     மலைக்கிராமம் எங்கள் ஊர். பக்கம் தூரம் என்பதெல்லாம் கிடையாது, 'மேலே' 'கீழே' என்பதே பெரும்பான்மை உபயோகம்
நான் பறித்து வந்து கொடுத்த மாதுளாங் கிளைகளில் அம்மா கொழுந்தாக ஆய்ந்து எடுத்துப் பக்குவமாக அரைப்பதை அருகில் இருந்து குத்துக்காலிட்டு கவனித்துக் கொண்டிருந்தேன்.
கொஞ்சம் சக்கரை போடும்மா.. ஆடு நல்லா சாப்பிடும்” என் அறிவிற்கெட்டிய ஆலோசனை அவளை மெல்ல சிரிக்க வைத்தது
நான் என் அம்மாவை தூங்கி பார்த்தது அபூர்வம் என்றால் அவள் சிரித்துப் பார்த்தது அதனினும் அரிதுதான். முன்பு மாடுகள்கோழிகள், இதோ இப்போது ஆடு மற்றும் எப்போதும் எங்கள் அப்பா என்று எல்லோருக்குமான தேவைகளே அவள் உலகம் என்று ஆனப்பின் சிரிப்பினை கொஞ்சம் சிக்கனப்படுத்த துவங்கி விட்டாள்.
இது ஆட்டுக்கில்லைடா.. உனக்குத்தான்! சின்ன சின்னதா ரெண்டு உருண்டை மட்டும் சாப்பிட்டு பாரு அப்புறம் உன் வயத்துவலி காணாமப்போயிடும்” என்று அம்மா சொல்லும் போதுதான் சதியினை புரிந்துக் கொண்டேன்.  நான் ஊரின் எல்லைக்கு தப்பி வந்து ஒற்றைக்கண்ணால்குறிபார்த்து உடும்பின் மீது கல்லெறிய துவங்கும்போதுதான் அம்மா நான் அங்கிருந்து மாயமானதை உணர்ந்து என்னை தேடத் துவங்கியிருப்பாள்.
மாலை நான் வீடு திரும்பியபொழுது அந்த ஆட்டுக்குட்டி மீதமான மாதுளைத்தழைகளை தின்று முடித்து மென்று அசை போட்டுக்கொண்டிருந்தது. ‘‘என் சொல்பேச்ச கேட்க நீயாவது இருக்கிறாயே!’’ என்று என் அம்மா ஆசுவாசப்பட்டிருக்கக் கூடும்.
ஊருக்குள் மருத்துவமனை கிடையாதுஅருகில் உள்ள மின்வாரிய முகாமிற்கு வாரம் ஒருமுறை  வரும் டாக்டர்தான் சினிமாவிலன்றி நாங்கள் நேரில் பார்த்திருந்த வெள்ளைக் கோட்டு அணிந்த டாக்டர்
வெளியே அவரது வண்டியில் கண்ணாடி ஜன்னலுக்குள் காத்திருக்கும் அவர் நாயும்மருத்தவமனைக்கு உள்ளே அவரும் அவ்வப்போது எழுப்பும் சப்தங்களுக்குள் வேறுபாடு கண்டறிதல் கடினம்.  அவர் கைராசிக்காரரா என்று தெரியாது ஆனால் ரகம் பிரிக்க இயலாத ஒரே மாதிரியான னா/னா மாத்திரைகளை மட்டுமே எல்லோருக்கும் தருவார். பத்திரிக்கைகளில் நான் படிக்கும் டாக்டர்’ ஜோக்குகளில் அவரை பொருத்திப்பார்ப்பதுஎனக்கு சௌகர்ய மாகிப்போனது.
சில சமயம் அம்மா கொடுக்கும் அதிரடி கைவைத்தியத்திற்கு இந்த டாக்டரின் மாத்திரைகளே பரவாயில்லை என்று தோன்றும்
ஒருநாள் அம்மாவின் மென்முறை வைத்தியம் ஒன்றில் புளகாங்கிதம் அடைந்து,
அம்மா நீ எப்படிம்மா இவ்வளவு மருந்துகள தெரிஞ்சு வச்சுருக்க!?’ என்றபோது 
‘‘எல்லாம் எங்கம்மா சொல்லிக்கொடுத்ததுதான்டா!’’ என்று சுருக்கமாக பதில் சொன்னாள்
காலில் சேற்றுப்புண் என்றால் தேங்காய் எண்ணையும் மஞ்சளும் ஒருசேர குழப்பி பூசிவிடுவாள் மெல்லிய எரிச்சல்தான் எதிர்வினை தாங்கிக்கொள்ளலாம், ஆனால் அடிபட்டகாயமென்றால்.. அம்மாடியோ..அதே தேங்காய் எண்ணையினை அடுப்பில் காயவைத்து கொதிக்க கொதிக்க உப்பு வைத்து கட்டிய சிறு துணி உருண்டையினை முக்கி எடுத்து காயத்தின் மீது வைத்துவிடுவாள். ’ வென்ற நிச்சய அலறலுடன்தான் காட்சி முடியும்.
பனிவிழும் மாலை நேரங்களில் யானைகள் ஊருக்குள் தெருவலம் வருவது குறைவு. அது போன்ற  நாட்களில் பக்கத்துவீட்டு பெண்களுடன் அம்மா பேசிக்கொண்டிருக்கையில் அவள் முந்தானையில்முக்காடு போட்டு கதகதப்பாய் அவள் மடியில் இருத்தி வைத்துக்கொள்வாள். அந்த சுகத்தைவிட பெட்டராக ஒரு 'இன்குபேட்டர்’ சாதனம் கண்டுபிடிக்கப்படவில்லை என்று உளமாற நம்புவோமாக.
 மருந்திற்கும் பள்ளியின் பக்கம் பார்த்திராத அவளுக்குள் ‘எப்படி இத்தனை நுணுக்கங்கள் பொதிந்த டி.என்.  சூத்திரம்? என்பது என் ஏழாம்அறிவிற்கு இன்றுவரை புரிபடவேயில்லை.
எல்லாத்துக்கும் உனக்கு மருந்து தெரியுமாம்மா?” என்ற என் தீராதஆச்சர்யத்திற்கும் எப்போதும் சின்னதாய் சிரிப்பொன்றே பதிலாய் கிடைக்கும்
அப்பா ஊரில் உள்ளவர்களுக்கு சுளுக்கெடுப்பார்நிஜமாகத்தான்அவர் காட்டில் உழன்ற நேரம் போக மாலைநேரங்களில் ஊரில் உள்ளவர்களுக்கு சுளுக்கெடுப்பதில் தன் மூர்க்கத்தனத்தினை வடிகாலிட்டுக்கொள்வார்
அதற்குப்பின் அம்மா உப்பு கற்களை வறுத்து துணியில் சிறு மூட்டையாக வைத்து சூடாக ஒத்தடம் கொடுக்கச்செய்வாள்அவர்களும் மறுநாள் வந்து “இப்போ பரவாயில்லம்மா” என்று சுகம் உரைக்கையில் நான் அம்மாவின் உப்பு வைத்தியம்தான் குணப்படுத்தியதாய் நம்பினேன்.
நான் பள்ளி செல்ல துவங்காத நாட்களில் ஒரு நாள் அம்மா குளித்துக்கொண்டிருக்கையில் என்னை அழைத்து அருகில் அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த நீரினை எடுத்து வாளியில் ஊற்றச்சொன்னாள். நான் அந்த கொதிக்கும் நீரை அவள் மீதே ஊற்றித்தொலைத்துவிட்டேன்!. அம்மா அலற… பயத்தில் நான் வீட்டை விட்டு ஓடிவந்து மாலை வரை அப்பா வரும் வழியில் காத்திருந்தேன்.
மாலை அவர் துணையுடன் வீடு வந்து சேர்ந்தப்பின் அம்மாவை மெல்ல எட்டிப்பார்த்தபோது அவளின் சிரிப்பினை கண்டப்பின்தான் விபரீதம் எதுவும் நிகழவில்லை என்று உணர்ந்தேன்.
நான் நகர வாழ்க்கைக்கு ஆட்பட்டப்பின்னர் ஏம்மா அந்த காட்டுலயிருந்து கஷ்டப்படுற.. என்கூட வந்திடும்மா” என்று பலமுறை அழைத்தும் “உங்கப்பாவை யாராவது பாத்துக்கணும்டாஎன்னை திட்டிக்கிட்டாவது என்கையால சாப்பிட்டாத்தான் அவருக்கு நிம்மதி” என்று ஒரே மூச்சில் மறுத்துவிட்டாள்.
நேற்று ஊரிலிருந்து செல்போனிற்கு அழைப்பு  வந்தது.  ”தம்பி.. சுப்புதான பேசுறது..நான் செல்வமணியண்ணன் பேசுறேன்.. உங்கம்மாவிற்கு சீரியஸ்.. உடனே கிளம்பி வாப்பா..” என்று அவர் முழுதாக சொல்லி முடிக்கும் முன்னர் யாரோ  அவரிடமிருந்து போனை பிடுங்கி 
டேய் தம்பி.. அதெல்லாமில்ல.. அவங்க இறந்துட்டாங்க.. நீ சீக்கிரம்கிளம்பி வாப்பாகுளிர் டைம்தான் பாடி’ காலைலவரை தாங்கும்வெச்சிருக்கோம் வா..!” என்று அவர் கொச்சையாய் சொல்லிய வார்த்தைகள் செவியிலிருந்து மூளைக்குள் கடந்து உறைக்க,  உணர்வுகள் சில்லிட்டுப்போனது.
கையிலிருந்த சொற்ப பணத்துடன் ஏதேதொ வண்டிகளை பிடித்து தடுமாறி ஊர் சென்று சேரும்போது சூரியனும் அடங்கியிருந்தான்.  என் வாழ்வின் மிக கொடிய நீண்ட பயணமாக அது மாறிப்போனது. 
வீட்டினை அடைந்தபொழுது அக்காள்தான் என்னை ஆற்றாமையுடன் பார்த்து அரற்றலுடன் அழத்துவங்கினாள். 
எப்படிக்கா?.. என்னாச்சு?” 
குளிரையும் மீறி வார்த்தைகள் துண்டுத் துண்டாய் வெளிவந்தது.   
அப்பாக்கூட சின்ன சண்டைடாஎப்பவும் போல அழுதுட்டு ‘நான் செத்தாத்தான் என் அருமை உங்களுக்கு புரியும்னு சொல்லிட்டு வெளியபோய் உக்காந்து இருந்தாங்க.. அப்புறம் காணோமின்னு தேடும்போது…”சொல்லிக்கொண்டே வீட்டின் பின்புறம் அழைத்துச்சென்று காட்டினாள்.
 வீட்டிற்கு பின்புறம் இருந்த பெரிய எருக்கஞ்செடியில் இருந்து நிறைய இலைகள் உடைத்து எடுக்கப்பட்டு அதன் பால் எல்லாம் ஒரு தொட்டாங்குச்சியில் சேகரித்து பாதி குடித்த நிலையில் மீதம் கொஞ்சம் வைக்கப்பட்டிருந்தது
மயங்கி விழுந்தாங்கன்னு.. ஆஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு ஓடுனோம்.. கொண்டு போகும்போதே எல்லாம் முடிஞ்சுடுச்சுடா” என்று முடித்தாள். 
நான் இன்னும் அழத்துவங்கியிருக்கவில்லை.

எனக்குத்தான் தெரியுமே… என் அம்மாவின் கைமருந்தின் பக்குவம்நிரந்தர மனநிம்மதிக்கு சரியான கைவசமுள்ள மருந்து எருக்கம்பால்தான் என்று அவள் முடிவு செய்திருக்கலாம்
ஆனால் ஒரு மருந்தினை தயாரிக்க அவள் எவ்வளவு சிரத்தையுடன் செயல்படுவாள் என்பதை நேரில் இருந்து அதிகம் பார்த்தவன் நான்தானே.
தம்பி.. உங்கண்ணனுக்கு தகவல் சொல்ல முடியல.. அதனால நீயே கொள்ளி வச்சுடு” 
எரியும் கட்டை என் கையில் கொடுக்கப்பட்டு பணிக்கப்பட்டேன். 
வெறும் சுடுநீரினை  நான் அவள் மேல் ஊற்றியதற்கே அம்மா அலறிய காட்சி கண்முன்னர் விரிந்தது. நான் பெருங்குரலில் அழுவதைத்தான் என்னால் தவிர்க்க முடியவில்லைஆனால் இந்த முறை நான் வீடு திரும்புகையில் அம்மா புன் சிரிப்புடன் காத்திருக்கப்போவது இல்லை. 
இழப்பு என் மீது தீராக்காயங்களை உண்டாக்க துவங்கியிருந்தது.
*******